search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு அதிகாரிகள்"

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பருவ மழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    குடிநீர் ஏரிகள் வறண்டு விட்டதால், சென்னை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரி ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீர் சென்னை நகருக்கு ஓரளவு கைகொடுத்து வருகிறது.

    அதுபோல் மற்ற மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது, விவசாய கிணறுகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுத்து வினியோகிப்பது குறித்தும் நிதி ஒதுக்கீடு பற்றியும் முடிவு செய்யப்பட்டது.

    இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    அதிகாரிகள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்று ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் பேசினார். #DMK #DuraiMurugan
    ஈரோடு:

    ஈரோட்டை அடுத்த லக்காபுரத்தில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பதில்லை. எதிர்கட்சியும் இதே தவறை செய்ய கூடாது என்பதற்காகத்தான் மக்களை திமுக நேரில் சந்தித்து வருகிறது.

    தற்போது மக்கள் தெரிவித்துள்ள குறைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை சந்திப்பது தான் மகத்தான சக்தி. மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    சிலை திருட்டு மிகவும் ஆபத்தானது. பக்திமான்களுக்கு வருத்தம் ஏற்படுத்தக்கூடியது. கலைநயம் படைத்த சிலைகள் திருடப்படுவது அவமான செயல். நீதிமன்றம் தெரிவித்த பிறகும் பொன்மாணிக்கவேலின் நேர்மையை அரசு சோதிப்பது வேடிக்கையானது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பு குறித்து சி.பி.ஐ விசாரித்திருந்தால் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது. அதிகாரிகள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே எவ்வித பாகுபாடும் ஏற்படக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #DuraiMurugan
    கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் குடிநீர், சாலை பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    கோவை:

    கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், சாலைப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    கோவை மாநகராட்சி, தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாகும். முதல்- அமைச்சர் தொழில் வளர்ச்சியை கணக்கில் கொண்டும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அவ்வாறு அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேற்றிட மாநகராட்சி அலுவலர்கள் சிரத்தையுடன் பணியாற்றிட வேண்டும். கோவை மாநகராட்சி பகுதிகளில், தெருவிளக்கு வசதிகள், குடிநீர் தேவைகள், கழிவுநீர் வடிகால்வசதி, சாலைவசதி, கழிப்பறை வசதிகள் என அடிப்படை கட்டமைப்புகளில் பூர்த்தி செய்யப்பட்ட மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்கிறது.

    எனவே கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படுகின்றதா என்று மண்டல அளவிலான அலுவலர்கள் தினந்தோறும் களஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து வார்டுகளிலும், தினந்தோறும் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு முழுசுகாதார துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு எரியாத தெருவிளக்குகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக சீர் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜய கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், வி.சி.ஆறுக்குட்டி மற்றும் சத்யநாராயணன், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா? என்று அரசு அதிகாரியை கமல்ஹாசன் கண்டித்துள்ளார். #GajaCyclone #KamalHaasan
    திண்டுக்கல்:

    தமிழகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி புரட்டிப்போட்ட கஜா புயல் கொடைக்கானலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததுடன் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட், வெள்ளைப்பூண்டு, உருளை கிழங்கு செடிகளை நாசம் செய்தது.

    மீட்பு பணிகள் முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் மக்கள் நீதிமய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பெரும்பாறை, மலையக்காடு, கோரங்கொம்பு, கே.சி.பட்டி, குரவனாச்சி ஓடை, பாச்சலூர், குரங்கணிப்பாறை, கடைசிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளையும், ஆதிவாசி மக்களையும் சந்தித்து குறைகள் கேட்டார்.

    அப்போது மலை கிராம மக்களிடம் அரசின் நிவாரண உதவிகள் கிடைத்துள்ளதா? என கேட்டார். அதற்கு அப்பகுதி மக்கள் அரசு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலரின் பெயர் மற்றும் அவரது செல்போன் எண் குறித்த விவரங்களை கேட்டார்.

    அந்த எண்ணுக்கு தானே போன் செய்து பேசினார். அப்போது அரசு திட்டத்தில் வீடு கட்ட ரூ.1.80 லட்சம் வழங்கப்படுகிறது. அதற்கு முன் பணமாக ரூ.50 ஆயிரம் பணம் எதுவும் கொடுக்க வேண்டுமா? என கேட்டார். அதற்கு அந்த அதிகாரி அப்படி யாருக்கும் பணம் தரத்தேவையில்லை என்றார். பிறகு எதற்காக அப்பாவி மக்களிடம் பணம் கேட்கிறீர்கள்?

    யாரும் பணம் கேட்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்களும் கண்காணித்து வருகிறோம் என்றார். இதனையடுத்து கிராம மக்களிடம் வீடு கட்ட நீங்கள் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை. யாரேனும் பணம் கேட்டால் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் கூறுங்கள் என்றார்.

    இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மலை கிராம மக்களுக்கு கம்பளி, ஸ்வெட்டர், தார்ப்பாய், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண உதவியை வழங்கினார். அதன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. புயல் பாதித்த கிராமத்தை தத்தெடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. முதலில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் முயற்சியில் நாங்கள் இறங்கி உள்ளோம். புயல் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை.



    இனிமேலாவது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.

    பின்னர் திண்டுக்கல்லில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை மத்திய அரசிடம் பயந்து கேட்காமல் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில் அரசியல் பின்னணி உள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம். ஸ்டெர்லைட் வேண்டாம் என்பது நோக்கமல்ல. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் நடத்த வேண்டும். மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாக தமிழக அரசு இருக்க வேண்டும்.

    ஆனால் தற்போது தமிழக அரசு சுயநலமாக செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கக்கூடாது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்களது வாழ்க்கை இன்னும் தாழ்வான நிலையிலேயே உள்ளது. அதிக இடங்கள் சேதம் அடைந்துள்ளன.

    நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும் தமிழக அரசு இன்னும் வேகம் காட்டவில்லை. இந்தியாவில் வரி செலுத்துவதில் தமிழகம் 2-வது மாநிலமாக உள்ளது.

    ஆனால் மத்திய அரசு தமிழகத்தை வியாபாரத் தளமாக மட்டுமே பார்க்கிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டும் ஆர்வத்தை கஜாபுயல் பாதிப்பில் காட்ட தவறி வருகின்றனர்.

    எனவே தமிழகத்திற்கு நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை அரசியலில் ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடி வருகிறோம்.

    டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சந்தித்தது அவர்களை நெருங்கியதாக அர்த்தம் அல்ல. அரசியல் மற்றும் தேர்தல் நிலைப்பாடு பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KamalHaasan
    யானைகள் உயிரிழப்பை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்து விட்டதாக கருதலாமா? என்று அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள். #MaduraiHCBench
    மதுரை:

    தேனி மாவட்ட வனப்பகுதியின் பெரும்பாலான இடங்கள், கடந்த 2012-ல் மேகமலை வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த வனப்பகுதியில் சிறுத்தை, மான், யானை, காட்டெருமை என 60-க்கும் மேற்பட்ட விலங்குகளும், தோதகத்தி, தேக்கு, சந்தன மரம் போன்ற அரிய வகை மரங்களும் உள்ளன.

    கடந்த நவம்பர் 26-ந்தேதி கம்பம் கிழக்கு வனச்சரகம், வெண்ணியாறு கிழக்கு மற்றும் மேற்கு பிரிவின் இணைப்பு பகுதியில் 2 பெண் யானைகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தன. இதற்கு முன்னர் பல யானைகள் வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.

    இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளியானது. இந்த செய்திகளின் அடிப்படையில், மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல மனு தாக்கல் செய்தது.

    அதில், வெண்ணியாறு வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கவும், இதற்கு மின்சாரத்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மேகமலை வன காப்பாளர் நேரில் ஆஜரானார். யானைகள் உயிரிழப்பு குறித்த நீதிபதிகளின் கேள்விக்கு ஜூன் மாதம் 2 யானைகளும், செப்டம்பரில் ஒரு யானையும், நவம்பரில் 2 யானைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவித்தார்.

    தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, மின் கம்பிகளை உயர்த்தக் கோரி மின்வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    அதற்கு நீதிபதிகள், ஜூன் மாதமே யானை உயிரிழந்த நிலையில், அதனைத் தடுக்க கடிதம் எழுதுவது மட்டும் போதுமா? என கடிந்து கொண்டனர்.

    மேலும் இதுபோன்ற வழக்கில், யானை உயிரிழப்பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அரசு வக்கீல் குறிப்பிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக மின்வாரிய தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    மேகமலை பகுதியில் யானைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் மேகமலை வன காப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

    மேலும் மதுரை மின்வாரிய செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் வருகிற 13-ந்தேதி மின் கம்பிகளை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #MaduraiHCBench
    மண்டபம் மற்றும் முதுகுளத்தூரில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் இடையூறு செய்தாக கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த வருகின்றனர். #Arrestcase

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்படம் பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அதிகாரிகள் நேற்று மண்டபம் பஜார் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்து கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது பஜார் பகுதியில் கடை வைத்திருக்கும் கருணாநதி (வயது 48). என்பவர் தன்னை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாக மஞ்சுநாத் மண்டபம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாய சேகர் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தார்.

    முதுகுளத்தூர் அருகே உள்ள எம்.கடம்பன்குளம் கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சம்பவத்தன்று எம். கடம்பன்குளம் ஊராட்சி செயலர் நதியா (வயது30) பணியாளர்கள் வருகை பதிவேடு குறித்து ஆய்வு செய்தார். அப்போது மீனாள், பத்மா, ராஜா ஆகிய 3 பேர் தன்னை தாக்கியதோடு பணி செய்ய விடாமல் தடுத்ததாக நதியா முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Arrestcase

    கவர்னர் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது தவறு இல்லை என்று முன்னாள் அட்வகேட் ஜெனரல் விளக்கத்தை சுட்டிக்காட்டி கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. #GovernorBanwarilalPurohit
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்ட வாரியாக ஆய்வு பயணம் செய்வதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகிறது. நாமக்கல் மாவட்ட போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

    ‘கவர்னருக்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் அதிகாரம் உள்ளது, கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்’ என்று கவர்னர் மாளிகையும், ‘கவர்னருக்கு ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை, போராட்டம் தொடரும்’ என்று தி.மு.க.வும் அறிவித்தன.

    இந்நிலையில் கவர்னர் மாளிகை நேற்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்டத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது குறித்து விமர்சனம் செய்யப்பட்டதும், இதுகுறித்து மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சட்ட நிபுணரான முன்னாள் அட்வகேட் ஜெனரலும், அகில இந்திய அளவிலான மூத்த வக்கீலுமான ஸ்ரீஹரி அனேய் என்பவரிடம் கருத்துகேட்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

    அதற்கு முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீஹரி அனேய் அளித்த விளக்கம் வருமாறு:-

    அரசியல் சட்டத்தை அமல்படுத்தியபோது, கவர்னரை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுப்பதா? நியமிப்பதா? என்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு, ‘கவர்னரை நியமிப்பதன் மூலம் மாநில அரசோடு மத்திய அரசுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்படும். தேர்தல் மூலம் நியமித்தால் அங்கு பிரித்தாளும் நிலை வரும். அதனால் கவர்னரை ஒரு அரசியல் கட்சியில் இருந்து தேர்வு செய்து நியமிப்பதன் மூலம் சட்டசபைக்கும், நிர்வாக துறைக்கும் நல்ல சரிசமமான தொடர்பு இருக்கும்’ என்று கூறினார். இதனை அரசியலமைப்பு குழு தலைவர் அம்பேத்கரும் ஏற்றுக்கொண்டார்.

    அரசியல் சாசனத்தில் கவர்னருக்கும், அவருடைய பதவிக்கும் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவைக்கு கவர்னர் தேவையான ஆலோசனைகளை வழங்குவார். தமிழகத்தில் இதற்கு முன்பு கவர்னராக இருந்தவர்கள், மாவட்ட நிர்வாகத்தோடு நேரடியாக கலந்துரையாடலில் ஈடுபட்டது இல்லை. அதனால் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தது தவறு என்றும், விதிமுறை மீறல் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் அசாம் மாநில கவர்னர் மாவட்ட நிர்வாகத்துடன் நேரடியாக கூட்டத்தை இதற்கு முன்பு நடத்தியிருக்கிறார். அதுபோல தமிழக கவர்னரும் கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்.

    அதனால் இது தவறு என்றோ, விதிமீறல் என்றோ, சட்டவிரோதம் என்றோ கூறமுடியாது. ஏற்கனவே தமிழகத்தில் இதற்கு முன்பு கவர்னராக இருந்தவர்கள் இதேபோல மாவட்ட நிர்வாகத்தோடு நேரடியாக கலந்துரையாடல் கூட்டம் நடத்தவில்லை என்பதால் தமிழக கவர்னர் செய்தது தவறு என்று சொல்லமுடியாது. அரசியலமைப்பு சாசனத்தில் கவர்னருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி அவர் செயல்பட்டுள்ளார். எனவே கோவை மாவட்ட நிர்வாகத்தோடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரடியாக கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது தவறு என்று கூறமுடியாது.

    இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருப்பதாக கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  #GovernorBanwarilalPurohit #TN

    கவர்னரின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக சட்டசபையில் திமுக உறுப்பின் சிவா கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க. உறுப்பினர் சிவா பேசியதாவது:-

    சூறாவளி காற்றில் முதல்-அமைச்சர் ஆட்சி என்ற கப்பலை செலுத்தி வருகிறார். கவர்னர் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்றுத்தராமல் அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.

    ஏற்கனவே 12 ஆண்டு முதல்-அமைச்சராகவும், 24 ஆண்டுகள் அதிகார பதவியிலும் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் நல்ல நிர்வாகத்தை விட்டுச் செல்லவில்லை. அவர் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அரசுக்கு இத்தகைய கடன்சுமை இருந்திருக்காது.

    ஆனால் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றபோது பெரும் கடன் சுமை இருந்தது. நிதிநிலை தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் பழி அரசு மீது விழுந்திருக்காது. அரசு நிறுவனங்களில் கடந்த காலத்தில் கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை. இதனால் மூடுவிழா நடத்தப்பட்டு வந்தது. இந்த பழி தற்போதைய அரசு மீது விழுந்துவிட்டது.

    அரசு அதிகாரிகள் இரட்டை ஆட்சிக்கு வழி செய்வது போல செயல்படுகின்றனர். கவர்னரின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். வாரந்தோறும் கவர்னர் ஆய்வு செய்வதால் என்ன பலன் கிடைத்துள்ளது? 2 ஆண்டுகளாக கவர்னர் தொடர்ந்து குப்பைவாரும் பணியைத்தான் செய்கிறார். ஆனாலும் இன்று வரை நிலைமை சீராகவில்லை. புதுவையில் மட்டும் ஏற்கனவே இயங்கி வந்த 15 பொது கழிப்பிடங்கள் மூடப்பட்டுள்ளது.

    கவர்னர் எந்த வேலையை செய்தாலும் அதில் தோல்விதான். சட்டசபையில் ரோடியர் மில், சாலை போக்குவரத்து கழகம், பாப்ஸ்கோ தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமி‌ஷன் முடிவு என்ன ஆச்சு? உள்ளாட்சித்துறையில் யாருக்கும் தெரிவிக்கப்படாமலேயே வரிவிதிப்பு செய்யப்படுகிறது. புதிதாக எதையும் செய்யாமல் வரி விதிக்கின்றனர். பாதாள சாக்கடை திட்டத்திற்கு எங்கும் இல்லாத அளவுக்கு வரி வசூலிக்கப்படுகிறது.

    சட்டசபை குழு கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்த பின்னர் ஆலையை அரசு மூடியுள்ளது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டே அரவை பணிகளை தொடங்க வேண்டும். குடிசை மாற்று வாரியம், ரோடியர் மில், பாப்ஸ்கோ ஆகியவற்றை கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிறுவனங்களில் ரூ.50 கோடி கடன் பெற பிசிஎஸ் அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அரசு நிறுவனம் வழங்கும் காசோலை பணமின்றி திரும்புகிறது. இது அசிங்கமில்லையா?

    ஏனாம் பகுதிக்கு மட்டும் சுகாதார காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுவை, காரைக்கால், மாகி பகுதி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? காப்பீட்டு திட்டத்தில் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய மருத்துவமனைக்கு பணம் செல்ல வேண்டும் என நினைத்து செயல்படுகின்றனர்.

    கவர்னர் தான் சார்ந்த கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர நினைப்பதால் தான் பிரச்சினைகள் உருவாகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அரசு அதிகாரிகளைவிட பாலியல் தொழில் செய்பவர்கள் மேலானவர்கள் என உத்தரபிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #SurendraSingh #BJP
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அரசு ஊழியர்களை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பேசியது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    “அரசு அதிகாரிகளை விட பாலியல் தொழில் செய்பவர்கள் எவ்வளவோ மேல். அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் வேலையை செய்கிறார்கள். மேடையில் தோன்றி நடனமும் ஆடுகிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய பிறகுகூட தங்கள் பணியை செய்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்றார் சுரேந்திரா.

    மற்றவர்கள் குறித்து மட்டுமல்லாமல் சொந்த கட்சியினரையும் சுரேந்திர சிங் விட்டு வைப்பதில்லை. சமீபத்தில் உ.பி.யில் நடந்த மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததற்கு, யோகி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களை குறை கூறினார்.



    இதேபோல் சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ராவணனின் தங்கை சூர்ப்பனகை என்று மோசமாக வர்ணித்ததும் இவர்தான். #SurendraSingh #BJP
    உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை இருப்பதை நிரூபிக்காவிட்டால் மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Sitapur #submittoiletproof
    லக்னோ:

    இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் மின்வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றை சீர்திருத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. குறிப்பாக திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களை உருவாக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை கட்டியதற்கான ஆதாரத்தையும், அந்த கழிவறை அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



    அவ்வாறு அதிகாரிகள் சமர்ப்பிக்க மறுத்தால், மே மாதத்துக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Sitapur #submittoiletproof
    அரசு அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்குவதால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல் மந்திரி எச்சரித்துள்ளார். #PinarayiVijayan #officialstakingbribes
    திருவனந்தபுரம்:

    அரசு அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்குவதால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

    கோழிக்கோடு பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அரசு அதிகாரிகள் யார் லஞ்சம் வாங்கினாலும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதைப்போன்ற சில அதிகாரிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக அரசு இயந்திரத்துக்கே அவப்பெயரை எற்படுத்தி விடுகிறது.

    அவர்களின் தேவைக்கேற்ப, நியாயமான, கைநிறைய சம்பளம் தரப்படுகிறது, எனவே, அதற்கேற்ப கண்ணியமாக வாழ அவர்கள் கற்றுகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். #PinarayiVijayan #officialstakingbribes
    ×